×

மாமல்லபுரம் முதல் அக்கரை வரை வாகன வேகத்தை கண்காணிக்க நவீன கேமரா

மாமல்லபுரம்: இசிஆர் சாலையில் மாமல்லபுரம் முதல் அக்கரை வரை வாகனங்களின் வேக கட்டுப்பாட்டை கண்காணிக்க நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் இருந்து அக்கரை வரை இசிஆர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் பஸ், வேன்,  கார், பைக் உள்பட பல்வேறு வாகனங்கள், போக்குவரத்து விதியை பின்பற்றாமல், அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் பலர் படுகாயமடைவதும், சில உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன.இதையடுத்து, இந்த சாலையில் செல்லும் வாகனங்களில் வேகத்தை கணக்கிடும் வகையில், வெளிநாடுகளை போல், நவீன கேமரா, வாகனங்களின் வேகத்தை எச்சரிக்கும் எலக்ட்ரானிக் பலகையுடன் கூடிய ரேடார் கருவி ஆகியவை பொருத்த சாலை போக்குவரத்து நிறுவனம் முடிவு செய்தது. இதையொட்டி, தற்போது  மாமல்லபுரத்தில் இருந்து அக்கரை வரை 30க்கும் மேற்பட்ட இடங்களில் எலக்ட்ரானிக் பலகையுடன் கூடிய ரேடார் கருவி மற்றும் நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்கள், 300 முதல் 350 மீட்டர் தூரத்தில் வாகனங்கள் வரும்போது, அதன் வேகத்தை கணிக்கும் வகையில் கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டுள்ள கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் செல்லும். பின்னர், அந்த வாகனங்களின் பதிவு எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் எச்சரிக்கப்படும். அதன் பிறகும், அந்த வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தால், இசிஆர் சாலையில் பயணம் செய்யும்போது, அந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும், 1 கிமீ தூரத்துக்கு ஒரு எலக்ட்ரானிக் பலகை பொருத்தப்பட்டு, அந்த இடங்களை பைக், கார், கடக்கும்போது அந்த வாகனங்கள் வரும் வேகத்தை, எலக்ட்ரானிக் பலகையில் காட்டி, நவீன தொழில்நுட்பம் மூலம்  உடனுக்குடன் ஓட்டுனர்களை எச்சரிக்கும் வகையில் தகவல் தெரிவிக்கப்படும். மேலும்,  வாகன ஓட்டிகள் வேகமாக செல்லக் கூடாது.  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என அடிக்கடி அந்த எலக்ட்ரானிக் பலகை தொடர்ந்து தகவல் தெரிவித்து கொண்டே இருக்கும். இதன் பயன்பாடு ஓரிரு நாட்களில் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் கூறினர்.

Tags : Akkarai ,Mamallapuram ,
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...