×

தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலகல்

புதுடெல்லி: தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விலகி உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கி குழுவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதே ஆண்டில் ஒன்றிய அரசு வேறொரு சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பிரதமரால் நியமிக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

இதுகுறித்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், ஜாய்மல்யா பாஷி மற்றும் விபுல் எம் பஞ்சோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த், “இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியானதாக இருக்குமா?” என கேள்வி எழுப்பியதுடன், “இதில் தீர்ப்பு வழங்கப்படும் சூழலில் என்னுடைய நிலைப்பாட்டில் நான் சுயநலனாக செயல்பட்டதாக சிலர் குற்றம்சாட்டக்கூடும்” என தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், “அதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பில்லை. இருப்பினும் வழக்கில் இருந்து நீங்கள் விலகி கொள்வது சரியான முடிவாக இருக்கும்” என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி சூர்யகாந்த், “இதுகுறித்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதியாக இல்லாத அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்படும்” என்று கூறினார்.

Tags : Supreme Court ,Chief Justice ,New Delhi ,Lok Sabha ,
× RELATED ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலின் சென்னை பயணம் ரத்து..!