×

அனுமதி இன்றி கோயில் கலசங்களுக்கு தங்க முலாம் பூச்சு

கடலூர், மார்ச் 21: கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோயிலில் வரும் 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் ராஜகோபுரத்தில் உள்ள 8 கலசங்களில் 3 கலசங்களுக்கு திருப்பணிகள் குழுவினர் தங்க முலாம் பூசியுள்ளனர். ஆனால் இதற்காக இந்து சமய அறநிலையத்துறை கோயில் அறங்காவலர் குழுவிற்கு தெரிவிக்காமல் தேவையான அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த ஒரு சில அமைப்பினர் கோயில் அருகே உள்ள செயல் அலுவலர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அதிகாரிகளிடம் அனுமதி இன்றி கலசங்களுக்கு தங்க முலாம் பூசியது குறித்து கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Cuddalore ,Pataleeswarar temple ,Thirupadhiripuliyur, Cuddalore ,Rajagopuram ,
× RELATED திருக்கோவிலூர் அருகே பாஜக பிரமுகர் காரில் ரூ.4,32,000 பறிமுதல்