×

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை கணவன், மாமியாருக்கு 5 ஆண்டு சிறை: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவன், மாமியாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிண்டி மடுவின்கரை பகுதியை சேர்ந்தவர்  ராஜேஷ் (31). இவருக்கும், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவரது மகள் அனிதாவுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அப்போது, வரதட்சணையாக 70 சவரன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை அனிதா குடும்பத்தினர் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் அனிதா, கணவன், மாமியார், மாமனார், கணவரின் சகோதரி கீதாமலர் ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், குடும்பத்தினர் அனைவரும் கூடுதல் வரதட்சணை கேட்டும், உடை அணிவதற்கு குறை கூறியும் அனிதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அனிதா 12.3.2015 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை ராஜசேகரன், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், ராஜேஷ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கணவன் ராஜேஷ், மாமியார் ராஜம்மாள் ஆகியோர் அனிதாவை தற்கொலைக்கு தூண்டியது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு பேருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என தீர்ப்பளித்தார்.

ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
வியாசர்பாடியில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த ஆர்.சின்னக்கண்ணு, கடந்த 2009ம் ஆண்டு மூலக்கடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியே சரக்கு வாகனத்தை மறித்து ஆவணங்களை கேட்டுள்ளார். வாகன உரிமையாளர் குமார் அனைத்து ஆவணங்களையும் கொடுத்துள்ளார். அதில் ஆர்.சி.புக்கை மட்டும் திருப்பி கொடுக்காத ஆய்வாளர் சின்னக்கண்ணு, ₹1200 கொடுத்தால் தான் தருவேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து குமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் அறிவுரையின் பேரில் லஞ்ச பணத்தை சின்னக்கண்ணுவிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை லஞ்ச ஒழிப்பு தடுப்புபிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓம்பிரகாஷ் முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் சின்னக்கண்ணு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ₹2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : suicide ,mother-in-law ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை