×

சினிமா எடுப்பது ‘ரிஸ்க்’ நிறைந்த தொழில்; தயாரிப்பாளர் மீதான மோசடி வழக்கு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: திரைப்படத் தொழில் நஷ்டத்தால் கடனைத் திருப்பிச் செலுத்தாதது ஏமாற்று வேலை கிடையாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சினிமா தயாரிப்பாளர் வி.கணேசன் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் தனது புதிய திரைப்படத் தயாரிப்பிற்காக பெரும் தொகையைக் கடனாகப் பெற்றிருந்தார். படம் வெளியான பிறகு எதிர்பார்த்த லாபம் கிடைக்காத காரணத்தால், வாங்கிய கடனை முழுமையாகத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தரப்பினர், தயாரிப்பாளர் கணேசன் திட்டமிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவர் மீது மோசடி வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், ‘திரைப்படத் தயாரிப்பு என்பது அதிக ‘ரிஸ்க்’ நிறைந்த தொழில். ஒரு படம் வெற்றி பெறுமா அல்லது தோல்வியடையுமா என்பதற்கு யாராலும் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஒரு நபர் தொடக்கத்திலேயே ஏமாற்றும் எண்ணத்துடன் செயல்பட்டால் மட்டுமே, அவற்றை பாலியல் பலாத்காரம் போன்ற மோசடி குற்றப் பிரிவின் கீழ் வரும்.

இங்கு தயாரிப்பாளர் படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். எனவே, அவருக்குத் தொடக்கத்திலேயே ஏமாற்றும் எண்ணம் இருந்ததாகக் கருத முடியாது. தொழில் ரீதியான ஒப்பந்தங்களில் ஏற்படும் பண இழப்பு அல்லது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போவது சிவில் பிரச்னை ஆகும். தொழில் நஷ்டத்தால் கடனைத் திருப்பித் தராதவரை குற்றவாளியாகக் கருத முடியாது’ என்று கூறி தயாரிப்பாளர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,New Delhi ,V. Ganesan ,
× RELATED சர்ச்சையை ஏற்படுத்திய இந்தி பாடல்...