×

கிருஷ்ணகிரியில் எருதாட்டம் 250 காளைகள் சீறிப்பாய்ந்தன

கிருஷ்ணகிரி, பிப்.16: கிருஷ்ணகிரியில் நடந்த எருதாட்டத்தில் 250க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பொங்கல் விழாவையொட்டி, ஜனவரி 15ம் தேதி துவங்கி, மார்ச் மாத இறுதி வரை பல்வேறு கிராமங்களில் எருதாட்டம் நடத்தப்படுகிறது. நேற்று, கிருஷ்ணகிரி பழையபேட்டையில் எருதாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி பழையபேட்டை மீன் மார்க்கெட் அருகில் இருந்து, காட்டிநாயனப்பள்ளி முருகர் கோயில் செல்லும் சாலையில் இந்த விழா நடத்தப்பட்டது. இதற்காக சாலையின் இருபுறங்களில் தடுப்புகள் கட்டப்பட்டு, எருதுகளை ஓட விட்டனர். எருதாட்டத்தில் கிருஷ்ணகிரி மட்டுமின்றி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இருந்தும், அண்டைய மாநிலமான ஆந்திராவில் இருந்தும் 250க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைகள் சீறிப்பாய்ந்து சென்றதை கண்டு, அங்கு கூடியிருந்த இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். அப்போது, காளைகளை அடக்க முயன்ற சிலரை, முட்டி தூக்கி வீசியவாறு காளைகள் முன்னேறிச் சென்றன. குறிப்பிட்ட தூரத்தை, குறைந்த நேரத்தில் ஓடி கடந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. அதன்படி, முதல் பரிசாக ₹1,25,555ம், 2ம் பரிசாக ₹1,05,555ம், 3ம் பரிசாக ₹75,555ம், 4ம் பரிசாக ₹65,555ம், 5ம் பரிசாக ₹55,555ம் என மொத்தம் 33 காளைகளின் உரிமையாளர்களுக்கு, சுமார் ₹7 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

எருதாட்டத்தை முன்னாள் எம்பி.யும், அதிமுக மாவட்ட செயலாளருமான அசோக்குமார் துவக்கி வைத்தார். இதை காண சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டனர். ஆட்டத்தின்போது மாடுகள் முட்டி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விழாவையொட்டி, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Krishnagiri ,bulls ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி