திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே கடற்கரையில் ஒதுங்கிய 8 கிலோ எடை கொண்ட மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகேயுள்ள சதுரங்கப்பட்டினம் மீனவர்கள் வசிக்கும் கடற்கரை ஓரத்தில் மர்ம பொருள் ஒதுங்கி கிடப்பதாக தகவல் பரவியது. இதனால் அந்த பகுதியில் மீனவர்கள் திரண்டனர். இதனையடுத்து மீனவர் ஞானசேகர், மர்மபொருள் குறித்து கடலோர காவல் படைக்கும், மீனவ கிராமத்தாருக்கும் தகவல் தெரிவித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் படையினர், மர்ம பொருளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். 8 கிலோ எடையுள்ள பைபர் மற்றும் கண்ணாடி கலந்த மர்ம பொருளாக இருந்தது, கப்பலுக்கு பயன்படுத்தும் திசை காட்டும் ரேடார் கருவியாக இருக்கலாமோ என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு மிக்க கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே இதுபோன்ற மர்ம பொருள் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
