புதுடெல்லி: மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் புதிய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் சிரியா மற்றும் ஏமன் நாடுகளின் வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த பழைய உத்தரவுகள் தற்போதும் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது நிலவும் போர் சூழலால் இந்த கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் காரணமாக, இன்று இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ஈரான், இஸ்ரேல், லெபனான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், ஈராக், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் குவைத் ஆகிய 11 நாடுகளின் வான்பரப்புகள் ‘அதிதி தீவிர ஆபத்து’ நிறைந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வான்பரப்புகளில் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் நடமாட்டம் இருப்பதால், இந்திய விமானங்கள் எக்காரணம் கொண்டும் இந்த நாடுகளின் வான்பகுதியை எவ்வித உயரத்திலும் கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடுகளின் குறிப்பிட்ட அனுமதி பெற்ற பகுதிகளில் பறக்கும் போது, 32,000 அடிக்குக் குறைவான உயரத்தில் பறக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தவறுதலாகப் பயணிகள் விமானங்கள் சுடப்படும் அபாயம் இருப்பதால், ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் போன்ற நிறுவனங்கள் தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன அல்லது மாற்றுப் பாதையில் இயக்கி வருகின்றன.
இதுகுறித்து விமான அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ராணுவ நடவடிக்கைகளால் பயணிகள் விமானங்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதே எங்களது நோக்கம். எனவே பாதுகாப்பு கருதி இந்த 11 நாடுகளின் வான்பரப்பைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
