×

கோம்பேரியில் சாலை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

தர்மபுரி, பிப்.16: தர்மபுரி அருகே கோம்பேரியில், 25ஆண்டுகளாக சாலை வசதி செய்து தராதை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கோம்பேரி கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு, நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். பின்னர், திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சப் கலெக்டர் பிரதாப், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், நல்லம்பள்ளி பிடிஓ சுருளிநாதன் ஆகியோர், அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், வனத்துறை அதிகாரிகளிடம் விரைவில் அனுமதி பெற்று, கோம்பேரியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கோம்பேரி கிராமத்தில், சுமார் ஆயிரம் பேர் வசிக்கிறோம். இங்கு விளைவிக்கப்படும் விவசாய பொருட்களை விற்பனைக்கு எடுத்து செல்லவும், பெண் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் சாலை வசதி இல்லை. இது குறித்து கலெக்டர் உள்பட பல அதிகாரிகளிடம், பல ஆண்டுகளாக  புகார் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக தார்சாலை அமைக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டோம். இன்னும் 15 நாளில் சாலை அமைக்கப்படும் என சப் கலெக்டர் உறுதியளித்துள்ளார்,’ என்றனர்.

Tags : Public Tarna ,Office ,Collector ,road facilities ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...