பட்டாசு விபத்தில் பலியான தம்பதி குழந்தைக்கு நிதி உதவி மாணிக்கம் தாகூர் எம்பி அறிவிப்பு

சிவகாசி, பிப். 16: சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டு துணை தலைமை அலுவலகத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தலைமையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வெடிபொருள் கட்டுப்பாட்டு துணை தலைமை அலுவலர் சுந்தரேசன் தலைமை வகித்தார். டான்பாமா சங்க தலைவைர் கணேசன், டிப்மா சங்க நிர்வாகி ராதாகிருஷ்ணன் உட்பட 20க்கும் மேற்பட்ட ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின் மாணிக்கம் தாகூர் எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என்பது தவறான பார்வை. பல லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தொழில் மூலம் பயனடைந்து வருகின்றனர். ஒரு சிலரின் தவறால் ஆலையில் விபத்துக்கள் நடக்கிறது. விதி மீறல்களை  சரி செய்வது அதிகாரிகளின் கடமை. மத்திய, மாநில அரசுகள் இணைந்து விபத்து நடந்த ஆலையில் என்ன தவறு நடந்தது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெடிபொருள் கட்டுப்பாட்டு தலைமை அலுவலகத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பேன். சாத்தூர் அருகே அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலை விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் நடு சூரங்குடியை சேர்ந்த செல்வி, பாக்கியராஜ் இருவரும் பலியாகினர். கணவன், மனைவி இருவரும் விபத்தில் பலியானதால் இவர்களின்  12 வயது பெண் குழந்தை ஆதரவின்றி  அவரது பாட்டி அவரை வளர்த்து  வருகிறார். இந்த குழந்தையின் கல்வி செலவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பில்  ரூ.25 ஆயிரம் ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படும். இந்த  கல்வி உதவிதொகை அந்த குழந்தையின் பட்ட மேற்படிப்பு வரை வழங்கப்படும். மத்திய அரசு பட்டாசு ஆலைவிபத்தில் இறந்தவர்களுக்கு நிவாரணத் தொகையை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>