×

வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முற்றுகை

மதுரை, பிப்.16: வீட்டுமனை பட்டா கேட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரை பீபீ குளம் முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஜெயபால், செயலாளர் பாண்டியராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு பட்டா கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்பு கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரிடம் வழங்கினர்.  இவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர்.  அப்போது போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் வெளியே  போராட்டத்தை நடத்தினர்.

போராட்டம் குறித்து நிர்வாகிகள் ஜெயபால், பாண்டியராஜ் கூறும்போது, ‘‘முல்லைநகரில் சுமார் 500க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது கண்மாய் நீர்நிலை பகுதி இல்லை. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். 1972 முதல் வீட்டுமனை பட்டா கேட்டு முறையாக மனு செய்தும் பட்டா வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர். இந்த இடம் தொடர்பாக  உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை மீறி, பொதுப்பணித்துறையினர் மற்ற துறை அதிகாரிகள் வீடுகளை இடிக்க நோட்டீஸ் வழங்கி, பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இதனால் அங்கு குடியிருக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். குடியிருப்பு தொடர்பாக வரும் ஏப்ரல் மாதம் வரை நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்யும்படி அறிவுறுத்திய நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து, வீடுகளை இடிக்கும் நிலையை உருவாக்கி வருகின்றனர். ஏற்கனவே கண்மாய் நீர்நிலை பகுதியை குடியிருப்பு பகுதியாக வகைப்பாடு செய்து பட்டா விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால், பட்டா வழங்கலாம் என அரசாணை உள்ளது. எனவே முல்லைநகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Siege ,Office ,Collector ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...