×

காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் வெளியேற்றிய 23 ஆலைகளை நிரந்தரமாக மூட பரிந்துரை

ஈரோடு, பிப்.16: ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் செயல்பட்டு வரும் சாய, சலவை ஆலைகள் கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக வாய்க்காலில் வெளியேற்றி வந்தன. இதை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி, காலிங்கராயன் பாசன சபை விவசாயிகள் கண்டறிந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கழிவுநீர் வெளியேற்றிய 30 ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதில், சீல் வைத்த 7 ஆலைகள் சட்ட விரோதமாக மீண்டும் பணிகளை துவங்க முயன்றனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் அந்த ஆலையை நிரந்தரமாக மூட ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இதையடுத்து, சீல் வைக்கப்பட்ட ஆலைகளில் விசைத்தறியாளர்கள் ரூ.5 கோடி மதிப்பிலான துணிகளை சாய, சலவை பணிக்காக அனுப்பி வைத்து, அங்கு தேக்கம் மடைந்துள்ளதாகவும், அதை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் அனுமதி கேட்டனர்.

அதன்பேரில், கலெக்டர் உத்தரவுப்படி காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் தலைமையிலான விவசாயிகளிடம் ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 30 ஆலையையும் நிரந்தராக மூட வேண்டும். உள்ளே இருக்கும் துணியை மட்டும் எடுக்க அனுமதிக்கலாம்.  அங்குள்ள ரசாயனம், வெளியேற்றாத சாய, சலவை கழிவு, இயந்திரங்கள், ஜெனரேட்டர் போன்றவற்றை அகற்றக்கூடாது என விவசாயிகள் தரப்பில் கோரிக்கையாக வைக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் விசைத்தறியாளர்கள் அவர்களது துணிகளை மட்டும் எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இது குறித்து ஆர்.டி.ஓ. சைபுதீன் கூறுகையில், `சீல் வைக்கப்பட்ட 30 ஆலைகளில் 7 ஆலை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆலையை மூட பரிந்துரைத்துள்ளோம். விசைத்தறியாளர்கள் சாயப்பணிக்கு கொடுத்த துணிகளை வெளியே எடுத்து கொள்ள அனுமதி கேட்டிருந்தனர். கலெக்டர் ஆலோசனைப்படி அவற்றை மட்டும் எடுத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற பொருட்களை எடுக்கக்கூடாது என கூறி உள்ளோம்’ என்றார்.

Tags : plants ,canal ,Kalingarayan ,
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்