மக்கள் குறைதீர் கூட்டத்தில் 18 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்'

ஊட்டி,பிப். 16: ஊட்டியில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.

இதில் பொதுமக்கள் குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, தொழில் மற்றும் கல்வி கடன் உதவி, முதியோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 138 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 5 பேருக்கு தலா ரூ.3,995 மதிப்புள்ள சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரங்களும், மாவட்ட கலெக்டரிடன் விருப்புரிமை நிதியில் இருந்து மருத்துவ சிகிச்சை மற்றும் கல்வி நிதியுதவியாக 9 பேருக்கு ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 500க்கான காசோலை, மாவட்ட மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் காது கேளாதவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 999 மதிப்பிலான இலவச திறன்பேசி மற்றும் மனவளர்ச்சி குன்றிய 3 பேரின் பெற்றோர்களுக்கு பாதுகாவலர் நியமன சான்று என மொத்தம் 18 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, மாவட்ட சமூக நல அலுவலர் தேவகுமாரி, மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் மலர்விழி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மருதாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>