×

கோணவாய்க்கால் பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

ஈரோடு, பிப்.16: ஈரோடு கோணவாய்க்கால் பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு மாநகராட்சி 53வது வார்டு கோணவாய்க்கால் மோகன் தோட்டம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வாய்க்காலில் வெளி நபர்கள் மது குடித்து விட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைக்கண்டித்தும், மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று கோணவாய்க்கால் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது: கோண வாய்க்கால் பகுதிக்கு அடையாளம் தெரியாத பிற பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். அவர்கள் அங்குள்ள வாய்க்கால் கரை பகுதியில் மது குடித்து விட்டு, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றர். மேலும், அவர்கள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். அவ்வாறு வரும் போது பைக்கில் வரும் நபர்கள் குழந்தைகள், முதியவர்கள் மீது மோதி விட்டு செல்கின்றனர். கடந்த 10 நாட்களில் சாலையில் நடந்து சென்ற 2 பேர் விபத்தில் சிக்கி மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

ஏற்கனவே, அடையாளம் தெரியாத நபர்கள் நடமாட்டம் குறித்து ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்து இருந்தோம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்கள் பகுதியில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மாநகராட்சி குப்பை வாகனங்களும் அதிவேகமாக வந்து செல்வதையும் தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மறியல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் அடையாளம் தெரியாத பைக் நபர்கள் நடமாட்டத்தை தவிர்க்க போலீசார் ரோந்து வந்து செல்வர். போலீஸ் அதிகாரிகளின் செல்போன் எண்கள் வழங்கப்படும். புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதி வேகமாக குப்பை வண்டி வந்து செல்வது குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் தகவல் தெரிவிக்கப்படும் என்றார். இதையடுத்து, மக்கள் மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : area ,Konavaikkal ,activities ,
× RELATED வாட்டி வதைக்கும்...