×

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

விழுப்புரம், பிப். 16: விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. ஆட்சியர் அண்ணாதுரை தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தனர். இந்நிலையில், மனு கொடுக்க வந்த பெண் ஒருவர், ஆட்சியர் அலுவலகம் முன் நின்று தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவரை காப்பாற்றினர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், புதுச்சேரி பாகூரைச் சேர்ந்த அருணாச்சலம் மனைவி கன்னியம்மாள்(45) என்பது தெரியவந்தது. போலீசாரிடம் அவர் கூறுகையில், எனது தாய் வீடு விழுப்புரம் பாணாம்பட்டு பாதையில் உள்ளது. கடந்த 1984ம் ஆண்டு 10 சென்ட் இடம் என் மீது பத்திரப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், ஆறே கால் சென்ட் மட்டுமே எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்றரை சென்ட் இடத்தை எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்யவில்லை.

இது குறித்து, பல ஆண்டுகளாக தாசில்தார் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அந்த இடத்தை அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்துள்ளார். அவருக்கு உடந்தையாக அதிகாரிகள் இருக்கின்றனர். இதனால் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். பின்னர், போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : office ,Villupuram Collector ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்