×

மதுக்கடையை அகற்ற கோரி பாஜக முற்றுகை போராட்டம்

மணப்பாறை, பிப்.12: திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஊனையூர் கிராமத்தில் மக்களுக்கு இடையூறாக உள்ள ‘டாஸ்மாக்’ கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்களுடன் இணைந்து பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் செயல்படும் டாஸ்மாக்’ மதுக்கடை வீடுகளுக்கு மத்தியில், மெயின் ரோட்டில் அமைந்துள்ளதால், பெண்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதனால், மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியினர் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியினருடன் நேற்று திருச்சி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர்கள் செந்தில் தீபக் , சுப்பிரமணி (விவசாய அணி) கோல்டு கோபாலகிருஷ்ணன் ( ஒபிசி அணி) மற்றும் மகளிர் அமைப்பினர், நிர்வாகிகள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலிலும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்தனர். இதனையடுத்து துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் வளநாடு போலீசார், மருங்காபுரி தாசில்தார் ஜெயப்பிரகாஷ் மற்றும் டாஸ்மாக் உதவி மேலாளர் ரவிசங்கர் உள்ளிட்டோர் பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில், மதுக்கடையை 45 நாட்களில் இடமாற்றம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால், காலையிலிருந்து மாலைவரை இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags : BJP ,siege protest ,removal ,liquor store ,
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு