×

தை அமாவாசையை முன்னிட்டு அக்னீஸ்வரர் கோயிலில் சுவாமி வீதி உலா

திருக்காட்டுப்பள்ளி,பிப்.12: திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயில் சமயக்குரவர்களால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இங்கு ஆண்டு தோறும் தை அமாவாசை நாளில் சுவாமி வீதி உலா வந்து காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு மண்டகப்படிதாரர் மற்றும் கிராம மக்கள் 9ம் தேதி கோயில் செயல் அலுவலர் சுதாவிடம் அனுமதி கேட்டு மனுவும் கொடுத்திருந்தனர். செயல் அலுவலர் அனுமதி மறுத்துவிட்டார். இது குறித்து தஞ்சை அறநிலையத்துறை இணை ஆணையரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நேற்று காலை மண்டகப்படிதாரர் மற்றும் கிராம மக்கள் கோயிலில் கூடி செயல் அலுவலரிடம் கேட்டபோது வீதி உலாவுக்கு இணை ஆணையர் அனுமதி தரவில்லை என்றார். முதல் நாளே பூதலூர் தாசில்தார் செயல் அலுவலருக்கு வாய் மூலம் அனுமதி அளித்தும் செயல் அலுவலர் தாசில்தாரிடம் எழுத்து மூலமாக அனுமதி பெற்று வந்தால் மட்டுமே வீதி உலாவிற்கு அனுமதிக்க முடியும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டு சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறாமல் தாமதம் ஆனது.

பின்னர் பக்தர்கள் தாசில்தாரிடம் எழுத்து பூர்வமாக அனுமதி பெற்று வந்தனர். அதன் பிறகு சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.பின்னர் புஷ்ப அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. நாதஸ்வர இசையுடன் பிரதான வீதிகள் வழியாக வீதி உலாவும் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடந்தது. இதில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் விழாக்கள் நடத்த அரசு அனுமதியளித்தும், அதிகாரிகளின் மெத்தனத்தால் சுவாமி புறப்பாடு 3 மணி நேரம் காலதாமதமாக நடந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : eve ,Swami Veedi Ula ,Agneeswarar Temple ,Thai ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்