×

மக்களவையில் 8 எதிர்க்கட்சி எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: உடனடியாக அமலுக்கு வந்தது

புதுடெல்லி: மக்களவையில் 8 எதிர்க்கட்சி எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி, முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காததை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் அவையில் அமளி செய்தனர். அப்போது, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக காங்கிரசின் குர்ஜீத் சிங் அல்ஜா, ஹிபி ஈடன், கிரண் குமார் ரெட்டி, அமரிந்தர் சிங் ராஜா வாரிங், மாணிக்கம் தாகூர், பிரசாந்த் படோலே, டீன் குரியகோஸ் மற்றும் மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் ஆகிய 8 பேர் கூட்டத்தொடர் முடியும் (ஏப்.2) வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் அவை வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை நீக்கக் கோரி அவைக்குள்ளும் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வதற்கான தீர்மானம் மக்களவையில் நேற்று கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி கே.சுரேஷ், ‘‘அவையில் நடந்த சம்பவங்கள் வருத்தத்திற்குரியவை. இனி அவையின் சுமூகமாக செயல்பாட்டிற்கு ஒத்துழைக்க எனது கட்சி தயாராக உள்ளது. நேற்றிலிருந்து (திங்கட்கிழமை) எதிர்க்கட்சி எம்பிக்கள் எந்த பாதகைகளும், பேனர்களையும் அவைக்கு கொண்டு வரவில்லை. எனவே 8 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார். பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்களும் அவை சுமூகமாக செயல்பட ஒத்துழைப்பதாக கூறினர்.

இதற்கு பதிலளித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பிக்கள் விதிமுறைகளை மீற மாட்டார்கள். கடந்த காலங்களிலும் அவர்கள் ஒருபோதும் விதிமுறைகளை மீறியதில்லை. அவையின் நடவடிக்கைகளை முடக்குவதற்கோ அல்லது போராட்டங்களை நடத்துவதற்கோ மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பவில்லை. அனைவரின் ஒத்துழைப்புடன் அவை சுமூகமாக நடைபெற வேண்டும். அதற்காக லட்சுமண ரேகை வரையறுக்கப்பட வேண்டும்’’ என்றார். இதை அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உடனடியாக சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

* பதாகை, பேனர் ஏந்தி வரக்கூடாது: ஓம் பிர்லா
தீர்மானத்திற்கான வாக்கெடுப்புக்கு முன்பாக பேசிய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைத்து எம்பிக்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். எனவே இனி அவைக்குள்ளோ, நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளோ பதாகைகள், பேனர்கள், புகைப்படங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களை யாரும் காட்சிப்படுத்தக் கூடாது’’ என வலியுறுத்தினார்.

Tags : Lok Sabha ,New Delhi ,Budget Session ,Congress ,House ,Rahul Gandhi ,
× RELATED சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 10...