×

மராமத்து பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி விஜயநாராயணம் பெரியகுளத்தில் விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம்

நாங்குநேரி, பிப். 12: விஜயநாராயணம் பெரியகுளத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தி விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான விஜயநாராயணம் பெரியகுளம் சுமார் 6 கிமீ நீளமுடையது.  இந்த குளத்தில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு விஜயநாராயணம் ஏழாம்கால், ஐந்தாம்கால் ராஜகோபாலபுரம், சங்கனான்குளம் மன்னார்புரம் மற்றும் திசையன்விளை வரை உள்ள பல்வேறு குளங்கள் மற்றும் பாசன நிலங்கள். குடிநீர் ஆதாரங்கள் பயனடைந்து வருகின்றன. கடந்தாண்டு ரூ.2 கோடி மதிப்பீட்டில் இக்குளத்தில் மராமத்து பணிகள் நடந்தன. இதில் ஒரு சில பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது குளத்தின் கரை பலமிழந்து காணப்படுவதால் தண்ணீர் இருந்தும் முழுமையாக குளத்தில் நீர் இருப்பு வைக்க முடியவில்லை. 75% மட்டுமே குளத்தில் நீர் இருப்பு உள்ளது. இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தட்டுப்பாடு வரலாமென இப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள், விஜயநாராயணம் பெரியகுளத்தில் உள்ள 4 மடைகள், உபரி மதகுகள் மற்றும் குளக்கரையை பலப்படுத்துதல், ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில், நேற்று முதல் விஜயநாராயணத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 15 விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
குறைந்தபட்சம் ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மராமத்து பணிகள் செய்ய வேண்டும் என்றும், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். போராட்டத்தில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Tags : Vijayanarayanam ,death ,Periyakulam ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி