×

இடிந்தகரை, அலவந்தான்குளத்தில்தேசிய வங்கி கிளை மத்திய நிதி அமைச்சரிடம் ஞானதிரவியம் எம்பி வலியுறுத்தல்

 நெல்லை, பிப். 12: டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஞானதிரவியம் எம்பி அளித்த மனு: நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா, விஜயாபதி ஊராட்சி இடிந்தகரை பகுதி முழுவதும் மீனவ மக்கள் வசிக்கும் பகுதியாகும். இடிந்தகரையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் வசிக்கும் பலர் வெளிநாட்டில் இருந்து வருகின்றனர். ஆனால் இடிந்தகரையில் வங்கி சேவையே இல்லை. இதனால் இடிந்தகரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மீனவ கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வங்கி சேவைகளுக்காக கூடங்குளம், ராதாபுரம் மற்றும் வள்ளியூருக்கு சுமார் 7 முதல் 10 கிமீ செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இடிந்தகரை பகுதி மக்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவை மிகவும் இன்றியமையாததாகும்.

இதேபோல, நெல்லை மாவட்டம், மானூர் தாலுகாவிற்கு உட்பட்ட அலவந்தான்குளம் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தற்போது தமிழ்நாடு கிராம வங்கி சேவையை மட்டுமே பெற்று வருகிறார்கள். அந்தச் சேவை அவர்களுக்கு போதுமானதாக இல்லை. அந்தப் பகுதியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவை மிகவும் அத்தியாவசியமானதாகும். எனவே அலவந்தான்குளம் மக்களும் தங்கள் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவை கோருகின்றனர். எனவே இடிந்தகரையிலும், மானூர் தாலுகா அலவந்தான்குளத்திலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை உடனே நிறுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Gnanathiraviyam ,Finance Minister ,Union ,Idinthakarai ,National Bank Branch ,
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...