×

மேட்டூர் அருகே திருமணமான 18 மாதத்தில் இளம்பெண் மர்ம சாவு போலீஸ்காரர் மீது மாமியார் பரபரப்பு புகார்

மேட்டூர், பிப்.12: மேட்டூர் அருகே திருமணமான 18 மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார். அவரை மருமகன் கொலை செய்துவிட்டதாக பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டூர் அருகே உள்ள கூணான்டியூரை சேர்ந்தவர் குணசேகரன்(55). இவரது மனைவி மஞ்சுளா(45). இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யபாமா(23) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். சத்யபாமாவை பள்ளிப்பட்டி கிராமம் ஒட்டங்காடு பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் யோகேஸ்வரன்(28) என்பவருக்கு, கடந்த 18 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொடுத்தனர். இவர்களுக்கு 2 மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. யோகேஸ்வரன் புதுக்கோட்டையில் ஆயுதப்படை  காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன், கரூர் மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இந்நிலையில், விடுமுறையில், கூணான்டியூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு வந்து யோகேஸ்வரன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் காலை, மஞ்சுளா உள்ளிட்டோர் அருகில் இருந்த தோட்டத்திற்கு சென்றனர். வீட்டில் சத்யபாமாவும், யோகேஸ்வரனும் இருந்துள்ளனர். சிறிது நேரம் கழித்து யோகேஸ்வரனின் தந்தை பெருமாள், தோட்டத்திற்கு சென்று மஞ்சுளாவிடம் சத்யாபாமா வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மஞ்சுளா மற்றும் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சத்யபாமா தூக்கில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மேச்சேரி போலீசில் சத்யபாமாவின் தாய் மஞ்சுளா புகாரளித்தார். அதில், தனது மகளின் சாவுக்கு அவரது கணவர் யோகேஸ்வரன் மற்றும் மாமனார் முருகேசன் ஆகியோரே காரணம். மருமகன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், மகளுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தார். அதனால் அவர் கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார் மேட்டூர் அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சத்யபாமாவின் சடலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அப்போது, யோகேஸ்வரன் போலீஸ்காரர் என்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதால் சடலத்தை எடுத்து செல்ல அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்து மஞ்சுளா மற்றும் குடும்பத்தினர் ஆம்புலன்சை மறித்து முற்றுகையிட்டனர். இதையடுத்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். திருமணமான 18 மாதத்தில் பெண் இறந்ததால் மேட்டூர் சப்கலெக்டர் சரவணன், மேட்டூர் டிஎஸ்பி சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து ஆயுதப்படை காவலர் யோகேஸ்வரன், அவரது தந்தை பெருமாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : mother-in-law ,death ,Mettur ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு