×

சேலம் வக்கீல் சங்க தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி திடீர் விலகல் வக்கீல்களிடையே பரபரப்பு

சேலம், பிப்.12: சேலம் வக்கீல் சங்க தேர்தலை நடத்த  நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி, அப்பொறுப்பில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் வக்கீல்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் சங்கம் மிகவும் பழமையானதாகும். இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். கடந்த 2019ம்ஆண்டு ஜனவரி மாதம் 7ம்தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மூத்த வழக்கறிஞர் மணிவாசகம் தலைமையிலான நிர்வாகிகள், வாக்காளர்கள் யார்? என்ற பட்டியலை தயார் செய்தனர். இந்நிலையில், ஜனவரி 3ம்தேதி சென்னை பார்கவுன்சில், தேர்தலை நடத்த தடை விதித்ததுடன், மூத்த வழக்கறிஞர்களான சீனிவாசன், ராஜசேகரன், பாலகுமார் ஆகியோர் கொண்ட நிர்வாகக்குழுவை நியமித்தது.

இவர்களை நியமித்தது செல்லாது என அறிவிக்ககோரி, சேலம் வக்கீல் மாதேஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 பேர் நியமனத்தை ரத்து செய்ததுடன், வக்கீல் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால், மூத்த வழக்கறிஞர் மணிவாசகம் ஆகியோரை நியமித்து உத்தரவிட்டனர். இதையடுத்து நிர்வாககுழு உறுப்பினர்களான 3 வழக்கறிஞர்களும், தங்களது பொறுப்புகளை நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். ஏற்கனவே சங்க தலைவராக இருந்த பொன்னுசாமி காலமானதையடுத்து, துணைத்தலைவரான பொன்.ரமணி தற்காலிக தலைவராக நேற்று பொறுற்பேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக வக்கீல் சங்க தேர்தலை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி வேணுகோபால், பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர், சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், குடும்ப பணிகள் இருப்பதால் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாது’ என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சேலம் வக்கீல் சங்க தலைவர் தேர்தலை நடத்த, சென்னை நீதிபதிகள் சொன்ன கருத்தை எதிர்த்து சென்னை வழக்கறிஞர் மோகனகிருஷ்ணன், டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : resignation ,judge ,Salem Bar Association ,lawyers ,election ,
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...