அரசு பள்ளியில் மகனை சேர்க்க வந்த பெண்ணை ஆசைக்கு இணங்க அைழத்த தலைமை ஆசிரியர் *உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு *இடமாற்றம் செய்து சிஇஓ நடவடிக்கை

இளம்பிள்ளை, பிப்.12: இளம்பிள்ளை அரசு பள்ளியில், மகனுக்கு சேர்க்கை கேட்டு வந்த பெண்ணிடம், தலைமையாசிரியர் ஆபாசமாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகேயுள்ள பெருமாகவுண்டம்பட்டியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியராக பழனிச்சாமி என்பவர், கடந்த 2 ஆண்டுகளாக  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இளம்பிள்ளையை சேர்ந்த இந்துமதி என்பவர், தனது மகனை ஆங்கில வழியில் 8ம் வகுப்பில் சேர்க்க, தலைமை ஆசிரியரை சந்தித்துள்ளார். அப்போது, மாணவனை வெளியே அனுப்பிய பழனிச்சாமி, இந்துமதியிடம் கணவர் என்ன தொழில் செய்கிறார் என்ற விபரங்களை கேட்டுள்ளார். அவர் தனது சொந்த ஊர் ஆத்தூர், கணவர் லாரி டிரைவர் என்று கூறியுள்ளார். மேலும், கொரோனா ஊரடங்கால் சரிவர தொழில் இல்லாததால், தனியார் பள்ளியில் படித்து வந்த மகன், மகளை அரசு பள்ளியில் சேர்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, மாணவரை பள்ளியில் சேர்த்து கொள்ளலாம் என தெரிவித்த பழனிச்சாமி, இந்துமதியின் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார். மேலும், தானே 5 ஏக்கர் காட்டை குத்தகைக்கு எடுத்து தருவதாகவும், தனியே வீடு பார்த்து தருவதாகவும் அவரிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.  இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் வெளியே வந்து தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அங்கு வந்த உறவினர்கள், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி, இந்துமதியிடம் தலைமையாசிரியர் மீது புகாரை பெற்று கொண்டனர். மேலும், இடைப்பாடி கல்வி மாவட்ட அலுவலர் விஜயா, தலைமையாசிரியர் பழனிச்சாமியிடம் நேரடி விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து, இந்துமதியிடமும் விசாரணை நடத்தி, அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பித்தார். சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், தலைமையாசிரியர் பழனிசாமி, பள்ளிக்கு இடமாறுதலில் வந்த நாளிலிருந்து, தனது அறையில் நடப்பது வெளியே தெரியாத வகையில் கருப்பு கண்ணாடி கொண்ட கதவை தனது சொந்த செலவில் அமைத்துக் கொண்டார். மேலும், பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் பெறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனிடையே, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமையாசிரியர் பழனிச்சாமியை காடையாம்பட்டி ஒன்றியம், ராமமூர்த்தி நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்

தலைமையாசிரியர் பழனிச்சாமி மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்த நிலையில், இளம்பிள்ளை அடுத்த புளியம்பட்டியை சேர்ந்த தேவராஜ் என்பவர் மகுடஞ்சாவடி போலீசில் தனது மகனை பள்ளியில் சேர்க்க பழனிச்சாமி ₹2500 லஞ்சம் பெற்றதாக புகாரளித்தார்.

Related Stories:

>