×

தாயிடம் கோபித்துக் கொண்டு கோவை சென்றார் சேலத்தில் மாயமான மாணவி மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு

சேலம், பிப்.12: சேலம் சீலநாயக்கன்பட்டியில் மாயமான பள்ளி மாணவியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் அப்பகுதியில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார். இவரது மகள் தாரிகா (14). ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, பாட்டியுடன் வீட்டில் இருந்த தாரிகா, மதியம் 11.45 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேச் சென்றார். பின்னர், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் அவரின் தோழிகளின் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை காணவில்லை. தாய் மஞ்சுவின் செல்போனை எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அந்த செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றிய புகாரின் பேரில், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவி தாரிகாவை தீவிரமாக தேடினர்.

விசாரணையில், மாணவி கையில் அணிந்திருந்த 3 பவுன் வளையலை தொலைத்துள்ளார். இதனால், தாயார் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் சாலையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், ஒரு ஆட்டோவில் மாணவி தாரிகா ஏறி, பழைய பேருந்து நிலையம் நோக்கிச் சென்றது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்த நிலையில் நேற்று மதியம், கோவைக்கு மாணவி சென்றது தெரியவந்தது. தாயிடம் கோபித்துக் கொண்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது தாத்தா, பாட்டி வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். அங்கிருந்து அவர்கள் சேலத்திற்கு வந்ததை அறிந்ததும், மீண்டும் மாணவி சேலம் புறப்பட்டு வந்துள்ளார். வழியில் போலீசார், மாணவி தாரிகாவை மீட்டனர். இதையடுத்து மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்து, பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : parents ,Coimbatore Salem ,
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்