ஒடிசா: மாநிலங்களவைத் தேர்தலில், பாஜக ஆதரவு வேட்பாளரான திலீப் ரேயின் கட்சி உத்தரவை மீறி அவருக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் தனது மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை, ஒடிசா காங்கிரஸ் கமிட்டி இடைநீக்கம் செய்தது உத்தரவிட்டுள்ளது.
சனகெமுண்டி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் சந்திர ஜெனா, பராபட்டி-கட்டாக் சட்டமன்ற உறுப்பினர் சோபியா ஃப்ர்தௌஸ் மற்றும் மோகனா சட்டமன்ற உறுப்பினர் தசரதி கோமங்கோ ஆகியோர் கட்சி உத்தரவை மீறி திலீப் ரேயை ஆதரித்ததால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் சார்பில் நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் டாக்டர் தத்தேஷ்வர் ஹோட்டா தோல்வியடைந்தார்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் சுஜித் பாடி,வெளியிட்ட அறிக்கையில்:
சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான ரமேஷ் ஜெனா, தசரதி கோமாங்கோ மற்றும் சோபியா ஃபிர்தௌஸ் ஆகியோர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சியின் கொறடாவை மீறி, கட்சியின் சித்தாந்தத்திற்கு எதிராகச் சென்று, பாஜக ஆதரித்த வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது. அவர்களின் செயல்கள் கட்சி ஒழுக்கத்தை மீறியது மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் நலன்களையும் சீர்குலைத்ததால், ஒடிசா காங்கிரஸ் கமிட்டி இந்த ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தது என கூறப்பட்டுள்ளது.
