×

ரிக் லாரிகள் இயங்கின ரிக் லாரி உரிமையாளர்கள் நடத்திய 5 நாள் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது

நாமக்கல், பிப்.12: நாமக்கல் பகுதியில், ரிக் லாரி உரிமையாளர்கள் நடத்திய 5 நாள் ஸ்டிரைக் நிறைவடைந்தது. ஆழ்துளை கிணறு அமைக்க ஒரு அடிக்கு ₹12 உயர்த்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில் ரிக் லாரி உரிமையாளர்கள், கடந்த 5 நாட்களாக தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நல்லிபாளையம் பைபாஸ் இணைப்பு சாலை அருகாமையில் உள்ள விவசாய தோட்டங்களில் சாமியானா பந்தல் போட்டு, அதில் கூடாரம் அமைத்து ரிக் லாரிகளை நிறுத்தி வைத்து, டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு தங்கியிருந்தனர். டீசல் விலையை காரணம் காட்டி ரிக்குகளை நிறுத்தி வைத்திருந்தாலும், தொழிலில் ஒற்றுமை ஏற்பட வலியுறுத்தி இந்த ஸ்டிரைக் நாடகம் அரங்கேறியது. கடந்த 5 நாளும் தினமும் மாலையில் ரிக் லாரி உரிமையாளர்கள் கூட்டம் போட்டு பேசி வந்தனர்.

நேற்று முன்தினம் ரிக் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பாரிகணேசன், அய்யாவு உள்ளிட்டோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ரிக் லாரிகள் ஆழ்துளை கிணறு அமைக்க, ஒரு அடிக்கு தற்போது வாங்கப்படும் கட்டணத்தில் இருந்து (₹75) ₹12 உயர்த்தி ₹87 ஆக வாங்கலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனைத்து ரிக் லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, நேற்று இரவுடன் ரிக் லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் நாடகம் முடிவுக்கு வந்தது. இது குறித்து நாமக்கல்லை சேர்ந்த ரிக் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து போன்கள் வருகிறது. ரிக் லாரி உரிமையாளர்கள் இடையே ஒற்றுமை ஏற்பட்டு அனைவரும் ஒரு அடிக்கு ₹87 வாங்கவது, அதற்கு குறைவாக வாங்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறது. இதனால் ஸ்ரைக் முடிவுக்கு வந்துள்ளது. நேற்று காலை முதல் ரிக் லாரிகள் இயங்க தொடங்கி விட்டது. மாவட்டம் முழுவதும் ரிக் லாரிகள் வழக்கமான பணிக்கு இன்று செல்லத் தொடங்கின,’ என்றார்.

Tags : owners ,strike ,Rick Lorry ,end ,
× RELATED சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் ஆய்வகம், பயிற்சி மையம் திறப்பு