×

புதுச்சேரியில் பாஜக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணித்த முதலமைச்சர் ரங்கசாமி..!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். புதுச்சேரியில் ஆளும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவி வந்த நிலையில் இழுபறி தற்போது பகிரங்க மோதலாக வெடித்துள்ளது. பாஜக நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தையை முதலமைச்சர் ரங்கசாமி அதிரடியாகப் புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிப்பதற்காக, பாஜக மேலிட நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பாஜக தரப்பினர் முதலமைச்சர் இல்லத்திற்கு வருகை தந்து, சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். ஆனால், அவர்களைச் சந்திக்க முன்வராத முதலமைச்சர் ரங்கசாமி, பேச்சுவார்த்தையைப் புறக்கணித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக நிர்வாகிகள் கடும் ஏமாற்றமடைந்தனர்.

இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது, லட்சிய ஜனநாயகக் கட்சி என்ற புதிய கட்சியை பாஜக கூட்டணியில் சேர்க்க எடுக்கும் முயற்சியாகும். பாஜக மேலிடம் இந்தக் கட்சியைத் தங்கள் அணியில் இணைக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், முதலமைச்சர் ரங்கசாமி இதற்குத் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஏற்கனவே உள்ள தொகுதிப் பங்கீட்டில் இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது என்.ஆர்.காங்கிரஸ் தரப்பின் வாதமாக உள்ளது.

முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கையினால் புதுச்சேரி ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. பாஜக உடனான உறவைத் தொடர்வதா அல்லது தனித்துச் செயல்படுவதா என்பது குறித்து ரங்கசாமி தனது கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. மேலும் தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள இந்தத் தொகுதிப் பங்கீடு மோதல், புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chief Minister ,Rangasamy ,BJP ,Puducherry Puducherry ,Puducherry ,Puducherry, N. R. ,Congress ,
× RELATED காலம் பேசாது ஆனால், காத்திருந்து பதில் சொல்லும்: ரஜினிகாந்த்