திருவில்லி. யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை

திருவில்லிபுத்தூர்,பிப்.12:  திருவில்லிபுத்தூர் அருகே  அச்சம்தவிர்தான் பஞ்சாயத்திற்குட்பட்டது திருவேங்கடபுரம் காலனி. இங்கு பல மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சிமன்ற நிர்வாகிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதி பொதுமக்கள் திருவில்லிபுத்தூரில் யூனியன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வேதநாயகம்  தலைமை வகித்தார்.  நிர்வாகி கணேசன், நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், விவசாய சங்கத்தைச் சேர்ந்த பலவேசம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் யூனியன் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் யூனியன் தலைவர் ஆறுமுகம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்தனர். குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தனர் இதனடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

Related Stories:

>