தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் குறுகலான பாதையால் போக்குவரத்து நெரிசல்

வத்திராயிருப்பு, பிப். 12:  தை அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை  மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பௌர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தை அமாவாசையையொட்டி கடந்த 9ம் தேதி முதல் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இன்று வரை கோயிலுக்கு செல்லலாம். நேற்று தை அமாவாசை என்பதால் அதிகாலை 3 மணி முதலே தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் பக்தர்கள் குவிந்தனர். சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் ஏராளமானோர் கார், வேன், டூவீலர் போன்ற வாகனங்களில் வந்தனர்.

பாதை குறுகலாக இருந்ததால் மகாராஜபுரம் விலக்கு பகுதியில் இருந்து தற்காலிக பஸ் ஸ்டாண்ட் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. தாணிப்பாறை வழுக்கல் அருவியில் குளித்துவிட்டு பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். தை அமாவாசையை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் என பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி வழிபட்டனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

>