கார்பைட் பழங்கள் விற்பனை? பழக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

திருப்புத்தூர், பிப்.12: திருப்புத்தூரில் பழ குடோன்களில் சுகாதாரத் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பழ வியாபாரிகள் சிலர் லாபம் சம்பாதிக்கும் நோக்கில் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைக்கும் முயற்ச்சியில் ஈடுபடுகின்றனர். இதற்காக பழங்களை தனி அறையில் முழு இருட்டில் அடுக்கி வைத்து கார்பைட் கற்களை தூவி விடுகின்றனர். இந்த வெப்பத்தின் காரணமாக பழங்கள் ஒரே நாளில் நிறம் மாறி பழம் போல் காணப்படுகிறது. இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால் திருப்புத்தூரில் நேற்று சுகாதாரத்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் பெரிய பள்ளிவாசல் பகுதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட திருப்புத்தூர் நகர் பகுதிகளில் உள்ள பழக்குடோன்கள் மற்றும் பழக்கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சில குடோன்கள் சுகாதாரம் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து குடோன் உரிமையாளர்கள் 2 பேருக்கு நோட்டீஸ் வழங்கினர். மேலும் குடோன்களில் 4 சுவர்களிலும் வெள்ளையடித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், பழங்களை டேபிள்கள் வைத்து அதன் மேலே வைக்க வேண்டும் எனவும், தரையில் வைக்கக் கூடாது எனவும் எச்சரித்தனர். ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர் இப்ராஹிம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தீனதயாளன், சுகாதார ஆய்வாளர் சகாயராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>