×

தை அமாவாசையை முன்னிட்டு சேதுக்கரையில் பக்தர்கள் புனிதநீராடல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

கீழக்கரை/தொண்டி, பிப்.12: திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் உள்ள கடலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு நேற்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடந்த மார்ச் மாதம் முதல் கொரானா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதுக்கரை கடலில் நீராட தடைவிதிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆடி அமாவாசை தினத்தில் சேதுக்கரை கடலில் புனித நீராட பக்தர்கள் வர முடியவில்லை.

தற்போது கட்டுப்பாடு நீக்கப்பட்டதால் கடலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. புனித நீராடிய பின் பக்தர்கள் ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்டனர். கோவில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 108 வைணவ தலங்களில் 44வது திவ்யதேசமாக உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சாமி கோவிலில் தை அமாவாசை தினத்தில் வழங்கப்படும் பாயாசத்தை குடித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம். இதனால் சேதுக்கரை தரிசனத்தை முடித்த பக்தர்கள் ஆதிஜெகநாத பெருமாள் சாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மடப்பள்ளி வளாகத்தில் வழங்கப்பட்ட பாயாசத்தை வாங்கி குடித்தனர். இதேபோல் தை அமாவாசையை முன்னிட்டு தொண்டி அருகே உள்ள தீர்த்தாண்டதானம் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். கடலில் அதிகளவு பாசி இருந்ததாகவும் போதிய வசதி இல்லை என்றும் பக்தர்கள் கூறினர். இனி வரும் நாள்களில் பக்தர்களின் நலன் கருதி அமாவாசை தினங்களில் கடற்கரையை நிர்வாகம் சுத்தம் செய்ய வேண்டும் என கோரிககை விடுத்தனர்.

Tags : Devotees ,ancestors ,Sethukkarai ,Thai ,eve ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...