×

மதிமுக பிரமுகர் மகன் தற்கொலை

மதுரை அழகர்கோவில் ரோடு மாத்தூர் மீனாட்சி காலனியை சேர்ந்தவர் கவுரி சங்கர். மதிமுக பிரமுகரான இவர், வைகோவின் நேர்முக உதவியாளர். இவரது இளைய மகன் ஜெயச்சந்திரன் (25). திருமணமாகவில்லை. தனியார் நிறுவன ஊழியரான இவர், மத்திய அரசு பணிக்கான போட்டி தேர்வு எழுதினார். இத்தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது. இதில் இவர் குறைவான மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று மதுரை வந்து, ஜெயச்சந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இறுதி சடங்கில் பங்கேற்றார்.
காதல் தம்பதிக்கு மிரட்டல்
பெருங்குடி அருகே வலையங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரும் சுவைதா பிரவீனாவும் இருவீட்டார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதில் முத்துப்பாண்டிக்கும், அவரது அண்ணன் சுடலைக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு சுடலை உள்பட 11 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாளுடன் வந்து சுவைதா பிரவீனாவிடம் உன் கணவர் எங்கே என்று கேட்டதுடன் அவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்த புகாரில் பெருங்குடி போலீசார் 11 பேர் மீதும் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
ரயிலில் அடிபட்டு பலி
திருமங்கலம் அருகே மறவன்குளம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் நேற்று 40 மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தார். தகவலறிந்த மதுரை ரயில்வே போலீசார் உடலை மீட்டு திருமங்கலம் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி தற்கொலை
கள்ளிக்குடி அடுத்த டி.பூதூரினை சேர்ந்த சோனைமுத்து மனைவி இருளாயி (60).கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர் மாடு மேய்க்கும் போது கயிறை இழுத்து கொண்டு மாடு ஒடியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். காலில் முறிவு ஏற்படவே சமீபத்தில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். எனினும் சரிவர நடக்க முடியாததால் மனவிரக்தியில் இருந்த இருளாயி நேற்று முன்தினம் காலை மண்ணெணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி இருளாயி உயிரிழந்தார். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
விசிக ஆர்ப்பாட்டம்
அவனியாபுரம் செம்பூர்ணி பைபாஸ் ரோடு அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிதிராவிட சமூகத்தினருக்கு மயானம் ஒதுக்கப்பட்டது. இந்த மயானத்தை கந்த சில மாதங்களுக்கு முன்பு மற்ற சமூகத்தினர் ஆக்கிரமித்தனர். இதுகுறித்து வட்டாட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மயான ஆக்கிரமிப்பை மீட்டு தர கோரி நேற்று அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விசிக தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மினி கிளினிக் திறப்பு
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூரில் மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் சகுபர் சாதிக் தலைமை வகிக்க, சேர்மன் மகாலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். துணை சேர்மன் மாலிக் வரவேற்றார். எம்எல்ஏ மாணிக்கம் மினி கிளினிக்கை திறந்து வைத்தார். இதில் பிடிஓ சாந்திராணி, ஏபிடிஓ சார்லஸ், மருத்துவர்கள் மனோஜ்குமார், கிருத்திகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர் போராட்டம் நிறைவு
தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 4.50 லட்சம் பணியிடங்களை நிரப்பவேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே நேற்று 10வது நாளாக மாவட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் மூர்த்தி, தலைவர் மூர்த்தி தலைமையில் அரசு ஊழியர்கள் திரண்டனர். பின்னர் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கடந்த 9 நாட்களாக நடந்த மறியல் போராட்டத்தை நேற்றுடன் முடித்து கொண்டனர். மாவட்ட செயலாளர் நீதிராஜா கூறும்போது, ‘தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்தகட்ட போராட்டம் வரும் 19ம் தேதி முதல் தொடரும்’ என்றார்.
தாலுகா ஆபீஸ் பூமிபூஜை
மதுரை மாவட்டத்தின் புதிய தாலுகாவாக திருமங்கலத்தை இரண்டாக பிரித்து கள்ளிக்குடி தாலுகா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. தற்போது தாலுகா அலுவலகம், கள்ளிக்குடியில் உள்ள இசேவை மையத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்நிலையில் தாலுகா அலுவலகத்திற்கான புதிய இடம் மதுரை- விருதுநகர் நான்குவழிச்சாலையில் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் பூமிபூஜை நேற்று நடந்தது. அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். இதில் டிஆர்ஓ செந்தில்குமாரி, ஆர்டிஓ சவுந்தர்யா, தாசில்தார் திருமலை, ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெருநாயை துன்புறுத்த கூடாது
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உயிரினங்களை பிடிக்கும் போது கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் கமிஷனர் விசாகன் பேசும்போது, ‘எந்த உயிரினங்களையும் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியாது. சட்டம் அதற்கு வழிவகுக்காது. உயிரினங்களை பாதுகாப்பதற்கென்று பல்வேறு விலங்குகள் நல அமைப்பினர் உள்ளனர். அதேபோல் ஒவ்வொரு நாட்டிற்கும் கலாச்சாரம் மாறுபடும். அணுகுமுறையிலும் வேறுபாடு இருக்கும். எனவே மாநகராட்சி பகுதிகளில் நாய் போன்ற உயிரினங்களை பிடிக்கும்போது, துன்புறுத்தாமல் முறையான பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்றார்.
50 டிவிக்கள் ‘அவுட்’
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் இருந்து கொட்டாம்பட்டியை நோக்கி நேற்று முன்தினம் இரவு விறகு லோடு ஏற்றி கொண்டு லாரி வந்தது. மேலூர் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் வந்தபோது லாரியின் டாப், தாழ்வாக சென்ற மின்வயர் மீது உரசியது. இதில் மின்அழுத்தம் ஏற்பட்டு அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவிக்கள் சேதமானது. இதையறிந்த கிராமமக்கள் உடனே அந்த லாரியை சிறைபிடித்து, கொட்டாம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். மேலும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பிறகே லாரியை விடுவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags : Madhimuga Pramukar ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை