×

கொள்முதல் நிலையம் திறக்காததால் விளைந்த நெல்களை விற்க முடியவில்லை செல்லம்பட்டி விவசாயிகள் புலம்பல்

மதுரை, பிப். 12:   செல்லம்பட்டி பகுதியில் கொள்முதல் மையம் திறக்காததால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வைகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் இந்தாண்டு தண்ணீர் சென்றதால், மதுரை செல்லம்பட்டி ஒன்றியத்தில் முண்டுவேலம்பட்டி, திடியன், நடுமுதலைக்குளம் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. தற்போது நெற்கதிர் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
இப்பகுதியில், ஆண்டுதோறும் 36 அரசு நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு இதுவரை நெல் கொள்முதல் மையம் திறக்கப்படவில்லை. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கடந்த மாதம் கலெக்டர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் விளைந்த நெல் கதிர்கள் கருகி, வயலில் தானாகவே கீழே உதிர்ந்து விழுகிறது. இதனால் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து, களத்தில் குவியல், குவியலாக வைத்து கவலையுடன் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி கர்ணன் கூறுகையில், ‘கடந்தாண்டும் வெளிமாவட்டத்தில் இருந்து பணியாளர்களை வரவழைத்து, காலதாமதமாக துவக்கப்பட்டதால் நெல்லை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். தற்போது திருநெல்வேலியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, மேலூர் பகுதியில் மையத்தை திறந்து கொள்முதல் செய்கின்றனர். இந்த பகுதிக்கும் பாதியாட்களை பிரித்து அனுப்பியிருக்கலாம். அதை அதிகாரிகள் செய்ய மறுக்கின்றனர். ஒவ்வொரு முறையும் பணியாட்கள் பற்றாக்குறை, இந்திரங்கள், சாக்குகள் இல்லை என ஏதாவது காரணத்தை கூறி விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறகக் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

ஓரிரு நாளில் திறப்பு
நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சுகுமாரிடம் கேட்டபோது, ‘‘இப்பகுதியில் மையம் திறக்க கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து பணியாளர்கள், எடை இயந்திரம், சாக்கு, நூல் சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. வரும் திங்கள்கிழமை முதல் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Sellampatti ,procurement center ,
× RELATED பால் கொள்முதல் மையம் துவக்கம்