×

விவசாயிகளுக்கு மானியத்துடன் சூரிய சக்தி மின்வேலி

கொடைக்கானல், பிப். 12: கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்போது வனவிலங்குகளின் தொந்தரவு அதிகமாக உள்ளது. இதை தவிர்த்து விவசாயம் செய்வதற்கு ஏற்ற வகையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவீதம் மானியத்துடன் கூடிய மின் வேலைகள் அமைப்பதற்கு வேளாண்மை பொறியியல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மலைப்பகுதி விவசாயிகள் தங்களது நிலத்தின் அமைப்பிற்கு ஏற்ப 565 மீட்டர் நீளமுள்ள மின்வேலி அமைப்பதற்கும், ஐந்து அடுக்கு, ஏழு அடுக்கு, பத்து அடுக்கு வரிசை உள்ள மின்வேலைகளை அமைப்பதற்கு மானியம் வழங்கப்படும்.

மானியத் தொகை போக மீதி உள்ள தொகை வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் பெயரில் விவசாயிகள் காசோலையாக வழங்க வேண்டும். இதுபோல் பட்டியல் இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 70 சதவீத மானியத்துடன் சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மின் மோட்டார்கள் வழங்கப்படும். விவசாயிகளின் பங்களிப்பு தொகை 70 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மாறுபடும். இந்த சூரிய சக்தி மின் மோட்டார் பட்டியலின விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படும்.

கொடைக்கானல் மலைப்பகுதி விவசாயிகள் இந்த மானியத்தை பெறுவதற்கு ஆதார், தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், வரைபடம், விவசாயிகளின் 2 புகைப்படம் ‘உள்ளிட்டவைகளை கொடைக்கானல் நாயுடுபுரத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது சம்பந்தமாக விவசாயிகள் விபரம் தெரிந்து கொள்ள 9944450552 என்ற செல் என்னை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கொடைக்கானல் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் செபாஸ்டியன் பிரிட்டோராஜ் தெரிவித்தார்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...