×

அஞ்செட்டி அருகே ரோந்து பணியின் போது கரடியிடம் சிக்கிய வனக்காப்பாளர்

தேன்கனிக்கோட்டை, பிப்.12: அஞ்செட்டி அருகே கரடி தாக்கியதில் படுகாயமடைந்த வனக்காப்பாளருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உள்ள உரிகம் வனப்பகுதியில் யானை, கரடி, மான், முயல் மற்றும் காட்டெருது உள்ளிட்ட விலங்கினங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் உரிகம் வனச்சகரம், மல்லல்லி காப்பு காடு பகுதியில் அனுகுழி சராகம் என்னுமிடத்தில், வனவர் மாணிக்கம் தலைமையில் வனக்காப்பாளர் நாராயணன்(45)  மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 3 பேர், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள புதர் பகுதியில் குட்டியுடன் இருந்த பெண் கரடி ஒன்று திடீரென வன ஊழியர்கள் மீது பாய்ந்தது. இதனைக்கண்டு அவர்கள் சுதாரித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர்.

அந்த கரடி நாராயணனின் வலது காலை கவ்வியது. இதில், ரத்தக்காயமடைந்த அவர் கதறி துடித்தார். சத்தம் கேட்டு புதருக்குள் இருந்து குட்டிகள் வெளி வந்துள்ளன. இதனால்,  நாராயணன் மீதான பிடியை தளர்த்திய கரடி, தனது குட்டிகளுடன் புதருக்குள் சென்று மறைந்து விட்டது. உடனே, அங்கிருந்த வன ஊழியர்கள், நாராயணனை மீட்டு உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக ஓசூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குட்டிகளை அச்சுறுத்த வருவதாக எண்ணிய தாய் கரடி, வன ஊழியர் மீது பாய்ந்துள்ளது. அதே வேளையில், தாக்குதலின்போது புதருக்குள் இருந்து குட்டிகள் வெளியே வந்ததால், தனது பிடியை விலக்கியுள்ளது. குட்டிகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பெண் கரடி கடித்து குதறியிருக்கும் என வன ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags : forest ranger ,Anchetti ,patrol ,
× RELATED வத்தல்மலை அடிவாரத்தில்...