பர்கூர் அருகே கொலையான சிறுவனை அடையாளம் காண்பதில் சிக்கல்

கிருஷ்ணகிரி, பிப்.12: பர்கூர் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுவன் தூக்துக்குடியை சேர்ந்தவன் என்பதில் குழப்பம் ஏற்படுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பர்கூர் அருகே கொட்டிலேட்டி மல்லேஸ்வரன் மலையடிவாரத்தில் கடந்த 8ம் தேதி மாலை 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிடந்தான். இதுகுறித்து பர்கூர் டிஎஸ்பி தங்கவேல், இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் 10 முதல் 12 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் யாரும் காணாமல் போய் உள்ளார்களா என விசாரித்தனர். இதில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரு சிறுவன் காணாமல் போனதாக தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தின. இதில், மனநலம் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு 2 மகன்கள் இருப்பதும், அதில் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஒரு மகன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போனதாகவும் தெரிய வந்தது.

இதையடுத்து, காணாமல் போனதாக கூறப்படும் சிறுவனின் தாயை, நேற்று போலீசார் தர்மபுரி அழைத்து வந்து, பிரேதப் பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ள கொலையுண்ட சிறுவனின் உடலை காண்பித்தனர். அதை பார்த்த அந்த பெண், தனது குழந்தை இல்லை என கூறினார். மேலும் அவர் கூறிய தகவல்கள் முரணாக இருப்பதாலும், மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாலும் அந்த சிறுவன் தூத்துக்குடியைச் சேர்ந்தவன் என உறுதி செய்ய முடியவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பர்கூர் அருகே கொலையுண்டு கிடந்த சிறுவனின் அங்க அடையாளங்கள், தூத்துக்குடி சிறுவனின் அடையாளங்களுடன் ஒத்து போகின்றன.

ஆனால், காணாமல் போன சிறுவனின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால், முன்னுக்கு பின் முரணாக கூறி வருகிறார். அந்த சிறுவன் 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறுகிறார். ஆனால், பர்கூர் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுவன் 8ம் தேதி மாலை கொலை செய்யப்பட்டு கிடந்தான். அவனது உடலை அன்றைய தினம் மதியத்திற்கு மேல் கொண்டு வந்து போட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது,’ என்றனர்.

Related Stories:

>