அரசு பள்ளி, கல்லூாியில் ஆசிரியர், பேராசிரியருக்கு கொரோனா தொற்று

தர்மபுரி, பிப்.12: தர்மபுரி அருகே பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில பிரிவு ஆசிரியைக்கு திடீரென சளி, காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது நேற்று தெரியவந்தது.

இதையடுத்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஆசிரியையுடன் நெருக்கமாக பழகிய ஆசிரியைகளுக்கும் நேற்று சளி, ரத்தம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் ரிசல்ட் இன்று (12ம் தேதி) வருகிறது. அதன் பின்னரே பிற ஆசிரியர்களுக்கும் தொற்று உள்ளதா என தெரியவரும். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆசிரியையின் வகுப்பில் படிக்கும் மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோல், அரூர் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் ஆங்கில பேராசிரியர் ஒருவர், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டார். இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று காலை ஆங்கில பாடப்பிரிவை சேர்ந்த 150 மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மற்ற வகுப்புகள் வழக்கம்போல் செயல்பட்டது.

Related Stories:

>