தை அமாவாசை: குமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்த ெபாதுமக்கள் முன்னோருக்கு பலி தர்ப்பணம் செய்து புனித நீராடினர்

கன்னியாகுமரி, பிப்.12: தை   அமாவாசையை யொட்டி கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து,   தங்களது முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடினர். ஆடி, தை மாத அமாவாசை நாட்களில் மக்கள் தங்களது   முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். இது வாழ்வில்  துன்பங்களை நீக்கி, சகல  தோஷங்களையும்  நிவர்த்தி செய்யும் என்பது  இந்துக்களின் நம்பிக்கை. அதன்படி நேற்று  தை அமாவாசையையொட்டி சர்வதேச  சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர்  மட்டுமின்றி நெல்லை,   தூத்துக்குடி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

அதிகாலையிலேயே அவர்கள் புரோகிதர்கள் உதவியுடன் தங்களது முன்னோருக்கு  பலி  தர்ப்பணம் செய்தனர். முக்கடல் சங்கமத்தில் புனித  நீராடிவிட்டு பகவதியம்மனை தரிசனம் செய்தனர். இதற்காக திரிவேணி   சங்கமத்தில் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு   பலப்படுத்தப்பட்டு இருந்தது. பழைய படித்துறை சுத்தம் செய்யப்பட்டு இருந்த  நிலையில் புதிய படித்துறை சுத்தம் செய்யப்படவில்லை. இந்த  பகுதியில் புனித  நீராட சென்ற பக்தர்களில் சிலர் கீழே விழுந்து காயம்  அடைந்தனர்.  இதையடுத்து போலீசார் அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. முக்கடல்   சங்கமத்தில் மட்டும் குளிக்க அனுமதித்தனர்.

பக்தர்களின்  இருசக்கர,  நான்கு சக்கர வாகனங்களை கடற்கரை சாலையில்  பார்க்கிங் செய்ய வசதிகள்  செய்யப்பட்டு இருந்தன. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா  முன்னெச்சரிக்கையாக மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க  வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடந்த  ஆடி அமாவாசையின் போது கொரோனா ஊரடங்கு  காரணமாக கன்னியாகுமரி  கடலில் நீராட  பக்தர்கள்  அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

''பகவதியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்''

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் தை அமாவாசையையொட்டி நேற்று அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்ககவசம், தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை  நடந்தது. மாலையில் சாயாரட்சை தீபாராதனை,இரவு 8 மணிக்கு அம்மன் பலவண்ண  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா, இரவில் முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடந்தது. வருடத்தில் 5  விசேஷ நாளில் மட்டும் திறக்கப்படும் கோயில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு  அம்பாள் கோயிலுக்குள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

Related Stories:

>