×

நிதி முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை ஆசிரியை மாற்றக்கோரி பள்ளிக்கு பூட்டுபோட்டு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முற்றுகை போராட்டம் கணியம்பாடியில் பரபரப்பு

வேலூர், பிப்.12: வேலூர் அடுத்த கணியம்பாடியில், நிதி முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை ஆசிரிைய மாற்றக்கோரி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், மாணவர்களுடன் பள்ளிக்கு பூட்டுபோட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் அடுத்த கணியம்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கணியம்பாடி, பொன்னத்தூர், சாத்துமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் உள்ள பழுதடைந்த வகுப்பறைகளை இடித்து விட்டு புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மேற்கொள்ளும் கட்டிட தொழிலாளர்கள் காலை 10 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கு முடித்துக்கொள்ள வேண்டும் எனவும், பள்ளிக்குள் தன்னை கேட்காமல் ஜல்லி, மணல் உள்ளிட்டவற்றை கொண்டு வரக்கூடாது எனவும் ஒப்பந்ததாரரிடம் தலைமை ஆசிரியை கறாராக கூறி வருகிறாராம். மேலும் இப்பள்ளியில் தூய்மைப்பணிகள் சரிவர மேற்கொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும், பள்ளிக்கு ஒதுக்கப்படும் நிதியை தலைமை ஆசிரியை முறைகேடாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இவற்றை கண்டித்து பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினர் மற்றும் மாணவ, மாணவிகள் நேற்று காலை பள்ளிக்கு பூட்டுப்போட்டு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பள்ளியை திறந்து மாணவ, மாணவிகளை வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் பள்ளி நிதியில் தலைமை ஆசிரியை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறி பெற்றோர்- ஆசிரியர் கழகத்தினர் சிறிது நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது முறைகேட்டில் ஈடுபட்ட தலைமை ஆசிரியையை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : siege protest ,Parent Teachers Association ,head teacher ,school ,scandal ,
× RELATED 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த...