காவல் நிலையத்தில் திருடிய டிராக்டரில் 2 ஆண்டுகளாக மணல் கடத்திய ஆசாமி உரிமையாளர் கண்டு பிடித்து ஒப்படைத்ததால் பரபரப்பு ஆரணி தாலுகாவில் இப்படியும் துணிகரம்

ஆரணி, பிப்.12:ஆரணி காவல் நிலையத்தில் திருடிய டிராக்டரை பயன்படுத்தி 2 ஆண்டுகளாக மணல் கடத்தி வந்த ஆசாமி பிடிபட்டுள்ளார். டிராக்டரின் உரிமையாளர் கண்டு பிடித்ததால் இந்த குட்டு அம்பலமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி தாலுகா போலீசார் ரோந்து சென்றபோது, அவ்வழியாக மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். பின்னர், காவல் நிலையத்தில் போதிய இடமில்லாததால் அருகே நீதிமன்றம் செல்லும் வழியில் அந்த டிராக்டரை நிறுத்தி வைத்தனர்.

மணல் கடத்தியது தொடர்பாக ஆரணி ராட்டிணமங்கலம் பகுதியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் உதயகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், போலீசார் பறிமுதல் செய்த 3வது நாளில் அந்த டிராக்டரை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட டிராக்டர் திருட்டு போனதால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் பகுதியில் சாலையோரம் டிராக்டர் ஒன்று நீண்டநேரம் நின்று கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக சென்ற உதயகுமார், அந்த டிராக்டர் தன்னுடையது போல் இருக்கவே அருகில் இருந்த நபரிடம் விசாரித்தார்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே உஷாரான உதயகுமார், உடனடியாக ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், அந்த டிராக்டர் காவல் நிலையம் அருகே திருட்டுபோன உதயகுமாரின் டிராக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்ததுடன், அதை ஓட்டிவந்த நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் ஆரணி அடுத்த தச்சூர் அண்ணா நகரை சேர்ந்த சின்னக்குழந்தை மகன் சந்தோஷ்(23) என்பது தெரியவந்தது.

பின்னர் அவரை கைது செய்தனர். சந்தோஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது: நான் கடந்த 2019ம் ஆண்டு புதிதாக டிராக்டர் ஒன்று வாங்கினேன். தச்சூர் செய்யாற்றில் டிராக்டரில் மணல் கடத்தி வந்தேன். இதனால் எனது டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்ததுடன், என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர்.தண்டனை முடிந்து வெளியே வந்ததும், டிராக்டருக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். எனவே, சம்பவத்தன்று காவல் நிலையம் அருகே நிறுத்தியிருந்த வேறு ஒரு டிராக்டரை, நான் எனது நண்பர்கள் 2 பேரின் உதவியுடன் திருடிச்சென்றேன்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த டிராக்டரை எனது ஊரில் மணல் கடத்துவதற்காக பயன்படுத்தி வந்தேன். நேற்று முன்தினம் டிராக்டரை பழுதுபார்க்க ராட்டிணமங்கலத்திற்கு கொண்டு வந்தபோது சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து சந்தோஷை கைது செய்தனர். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாக்ஸ்...

தும்பைவிட்டு வாலை பிடித்த போலீசார்

காவல் நிலையம் அருகே நிறுத்தியிருந்த டிராக்டர் திருட்டு போனதால் அதிர்ச்சியடைந்த போலீசார், ஆரணி பகுதிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த சிலரை காவல் நிலையம் அழைத்து வந்து, டிராக்டரை திருடியதாக ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியுள்ளனர். சிலர் மீது வழக்கும் பதிந்துள்ளனர். ஆனால், டிராக்டரை திருடி சென்றவரோ 2 ஆண்டுகளாக மீண்டும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். போலீசார் முறையான விசாரணை நடத்தாமல், இந்த திருட்டில் சம்பந்தம் இல்லாதவர்களை அடித்து உதைத்து சிறையில் அடைத்துள்ளனர். தும்பை விட்டு வாலை பிடிக்கிற கதையாகத்தான் இது இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>