×

திருவண்ணாமலையில் 2வது நாளாக ராணுவத்துக்கான நேரடி ஆட்சேர்ப்பு முகாம் உடல் தகுதி தேர்வில் 1,045 இளைஞர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை, பிப்.12: திருவண்ணாமலையில் தொடர்ந்து 2வது நாளாக ராணுவத்துக்கான நேரடி ஆட்சேர்ப்பு முகாம் நடந்தது. அப்போது, 1,045 இளைஞர்கள் உடல் தகுதித்தேர்வில் பங்கேற்றனர். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களுக்கான, ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்து வருகிறது.
இந்த முகாமில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர், மற்றும் ஸ்டோர் கீப்பர், சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்த இளைஞர்களுக்கு மட்டுமே இந்த முகாமில் அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக, நாளொன்றுக்கு அதிகபட்சம் 1,500 இளைஞர்களுக்கு மட்டும் அழைப்பு கடிதம் அனுப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பரிசோதனை செய்தவர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆட்சேர்ப்பு முகாமின் இரண்டாவது நாளான நேற்று 1,520 இளைஞர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில், 1,045 இளைஞர்கள் பங்கேற்றனர். ராணுவ ஆட்சேர்ப்பு தலைமை அலுவலக இயக்குநர் கர்ணல் கவுரவ்சேத்தி தலைமையில், உடல் தகுதித்தேர்வு நடந்தது. அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய தகுதித்தேர்வின் முதலாவதாக 1.6 கிமீ தூரம் ஓட்டமும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் உயரம் தாண்டுதல், 9 அடி கால்வாய் தாவுதல், புல் அப், ஜிக் ஜாக் பேலன்ஸ் உள்ளிட்ட உடல் தகுதித்தேர்வுகள் நடந்தது. இரண்டாம் நாள் நடந்த உடல் தகுதித்தேர்வில், 72 இளைஞர்கள் தகுதி பெற்றனர். உடல் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் தகுதி பெறும் இளைஞர்களுக்கு, விரைவில் சென்னையில் எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.

Tags : youths ,recruitment camp ,Thiruvannamalai ,army ,
× RELATED கோயில் மின்விளக்கு அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து 2 வாலிபர்கள் பலி