×

செய்யாறு அருகே கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு அதிகாரிகளுக்கு டோஸ்விட்ட எம்எல்ஏ

செய்யாறு, பிப்.12: செய்யாறு அருகே கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முன்னேற்பாடுகளை முறையாக செய்யாத அதிகாரிகளுக்கு எம்எல்ஏ சரமாரியாக டோஸ் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வெம்பாக்கம் தாலுகாக்களை சேர்ந்த அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் 6,892 பெண்கள் உட்பட 10 ஆயிரத்து 444 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி, ஆரணி சாலையில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை முதலே ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் அங்கு கூடியிருந்தனர். சுமார் 30 கி.மீ. தொலைவில் இருந்து பஸ்களில் பயணம் செய்து செய்யாறு பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கு பலர் நடந்தே வந்தனர்.

அவர்களிடம் ஆதார் அட்டை மற்றும் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டையின் ஜெராக்ஸ் கொண்டு வரவேண்டும் என அதிகாரிகள் திடீரென கூறியதால், ஜெராக்ஸ் எடுப்பதற்கு தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், அவ்வழியாக காரில் சென்று கொண்டிருந்த எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆயிரக்கணக்கானோர் சாலையில் நின்று கொண்டும், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும் இருப்பதை பார்த்து விசாரித்தார். அவர்கள் இலவச வேட்டி, சேலை வாங்குவதற்காக அலைமோதிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

இதற்கான ஏற்பாடுகளை அமைப்புசாரா தொழிலாளர் நலஅமைப்பின் அலுவலர்கள் முறையாக செய்யாததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அரசுக்கு தானே கெட்ட பெயர். வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்க வேண்டுமென்றால் அங்குள்ள தாலுகா அலுவலகத்திலோ, திருமண மண்டபத்திலோ நானே ஏற்பாடு செய்து கொடுத்திருப்பேன்.

யாரையும் கேட்காமல் இதுபோன்று அலட்சியாக செயல்படுகிறீர்களே என அதிகாரிகளுக்கு சரமாரியாக எம்எல்ஏ டோஸ்விட்டார். இதையடுத்து, செய்யாறு போலீசாருக்கு தகவல் கொடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, வெம்பாக்கம் தாலுகாவை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, அங்கேயே வேறொரு நாளில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கூலி வேலையை விட்டு வந்து தள்ளுமுள்ளுக்கு இடையே நீண்ட நேரம் காத்திருந்தும் வீணாகி போனதே என தொழிலாளர்கள் முணுமுணுத்தபடி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Doswita MLA ,construction workers ,Seiyaru ,
× RELATED நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து