வந்தவாசி அருகே முகவரி கேட்பது போல் நடித்து கோர்ட் ஊழியர்களை தாக்கிய வழிப்பறி கும்பல் போலீஸ் விசாரணை

வந்தவாசி, பிப்.12: வந்தவாசி அருகே முகவரி கேட்பது போல் நடித்து கோர்ட் ஊழியர்களை சரமாரி தாக்கிவிட்டு தப்பிய வழிப்பறி கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். சேத்துப்பட்டு அடுத்த நமத்தோடு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(50). மேல்நந்தியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகண்ணன்(55). இவர்கள் வந்தவாசி கோர்ட்டில் அலுவலக உதவியாளராக பணிபுரிகின்றனர். கடந்த 9ம் தேதி இருவரும் பணி முடித்துவிட்டு கோர்ட்டில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்றனர்.

பின்னர், இரவு 8 மணியளவில் ஏந்தல் கூட்ரோடு அருகே சென்றபோது எதிரே பைக்கில் வந்த 3 பேர் கும்பல், இவர்களை நிறுத்தி பெரணமல்லூருக்கு எப்படி செல்ல வேண்டும்? என கேட்டுள்ளனர். அதற்கு வழி சொல்லி கொண்டிருக்கும்போதே திடீரென அந்த கும்பல் இரும்பு ராடால் அவர்களை சரமாரி தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து செய்யாறு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீசில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், எஸ்ஐ ஜெயராமன் வழக்குப்பதிந்து தப்பியோடிய 3 பேர் கும்பலை தேடி வருகிறார்.

மேலும் இச்சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்தவாசி வடக்கு காவல் நிலையத்துக்குட்பட்ட புலிவாய் கிராமத்தில் லாரி டிரைவர் ஒருவரை 3 பேர் கொண்ட அடையாளம் தெரியாத வாலிபர்கள் தாக்கிவிட்டு சென்றுள்ளனர். எனவே அதே கும்பல்தான் கோர்ட் ஊழியர்களையும் தாக்கியிருக்கவேண்டும் என கருதப்படுகிறது. மேலும் அவர்கள் வழிப்பறி கும்பலாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories:

>