×

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி புதிய ஆர்டர்களை எதிர்நோக்கி பின்னலாடை உற்பத்தியாளர்கள்

திருப்பூர், பிப்.12:சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் நீடிக்கும் பட்சத்தில் அந்நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பல்வேறு பொருட்கள் உற்பத்தி குறைந்து ஏற்றுமதி தடைபடும் அபாயம் உள்ளது. அந்நாட்டிற்கு ஆர்டர் கொடுத்துள்ள பையர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப புதிய நாடுகளுக்கு ஆர்டர்களை பிரித்துக் கொடுக்க வாய்ப்பு இருப்பதால் பின்னலாடைக்கான ஆர்டர்களை எதிர்நோக்கி திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கின்றனர்.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:-சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல்  என்பது வேதனை அளிக்கிறது. நோயின் காரணமாக இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். பின்னலாடை உற்பத்தி மட்டும் இல்லாது மின்னணு சாதனங்கள், கம்யூட்டர்கள், மொபைல்போன், விளையாட்டு பொருட்கள், மின் விளக்குகள் உட்பட பல்வேறு பொருட்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், மலிவான விலையில் அனைத்து விதமான பொருட்களையும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் அதிக ஆர்டர்கள் கிடைக்கிறது.

கொரோனா வைரஸ் நோய் பரவி வரும் காரணத்தால் சீனாவில் பல்வேறு தொழிற்சாலைகளில்  உற்பத்தியை நிறுத்தி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர். இதனால் சீனாவில் வர்த்தக தொடர்பு வைத்துள்ள நாடுகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், சீனாவிற்கு ஆர்டர்கள் கொடுத்து வந்த பையர்கள் பிற நாடுகளுக்கு புதிய ஆர்டர் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் பின்னலாடை பொறுத்தவரை திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் புதிய ஆடர்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். புதிய ஆர்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த ஆர்டர்களை தொடர்ந்து தக்க வைக்க தரமான ஆடைகள் தயாரித்து குறித்த காலத்தில் டெலிவரி செய்து அந்நாட்டின் பையர்களை திருப்திப்படுத்த வேண்டும்.

தற்போது, திருப்பூர் பின்னலாடை மொத்த உற்பத்தி ரூ.55 ஆயிரம் கோடியாக உள்ளது. புதிய ஆர்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்களின் ரூ. ஒரு லட்சம் கோடி என்ற வர்த்தக இலக்கை விரைவில் எட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Knitwear manufacturers ,China ,corona virus attack ,
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்