திருப்பூர் ஜீவாநகரில் ஆக்கிரமிக்கப்பட்ட கூட்டுறவு சங்க இடத்தை மீட்டு தர கோரி மக்கள் கலெக்டரிடம் மனு

திருப்பூர்,பிப்.12:திருப்பூர், ஜீவா நகரில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இடத்தை மீட்டு தரக் கோரி ஜீவா நகர் வீட்டு உரிமையாளர் நல சங்கத்தினர் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம் ஜீவா நகரில் ஆசர்மில் தொழிலாளர்களின் சங்கம் மில் தொழிலாளர்களின் வீட்டு வசதிக்காக 1960ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இங்கு, 112 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனிடையே சங்க உறுப்பினர்கள் பொது உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சங்க உறுப்பினர்களின் நிதி உதவியுடன் கோவை மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று கடந்த 2005ம் ஆண்டு அங்கு திருமண மண்டபம் மற்றும் கோயில் கட்டப்பட்டது.

மேலும் 2007ம் ஆண்டு கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனிடையே கடந்த 2010ம் ஆண்டு சங்கத்தை சங்க உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இந்த சங்கத்தை கலைத்து விட்டார். இது சங்கத்தை மீண்டும் இயக்க கோரி, சங்க உறுப்பினர்கள் கூட்டுறவு வீட்டு வசதி பதிவாளர் மற்றும் அமைச்சருக்கும் பலமுறை மனு கொடுத்திருந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே, திருப்பூர் வட்ட கூட்டுறவு சங்க தலைவர் நீதிராஜன் எங்களது சங்க இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறி, எங்கள் அனுபவத்தில் இருந்து வரும் அன்னதான மண்டபத்தின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்து அங்கிருந்த பொருட்களை எடுத்து வெளியே வைத்து விட்டு ஆக்கிரமித்து விட்டார். எனவே, இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், சங்க இடத்தை எங்களுக்கு மீட்டுத்தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

Related Stories: