பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு அதிகாரிகள் போல் நடித்த வாலிபரால் பரபரப்பு

ஊட்டி, பிப். 12: பிங்கர்போஸ்ட் மற்றும் காந்தல் பகுதியில் உள்ள சில வீடுகளில் தனிமையில் உள்ள பெண்களில், அரசு அதிகாரிகள் போல் நடித்து உள்ளே சென்ற வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஊட்டி அருகேயுள்ள பிங்கர்போஸ்ட் மற்றும் காந்தல் செல்லும் வழியில் உள்ள சில வீடுகளில் இளைஞர்கள் சிலர் சென்சஸ் எடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டிற்குள் சென்றுள்ளனர். குறிப்பாக, பகல் நேரங்களில் பெண்கள் மட்டும் உள்ள வீடுகளுக்குள் சென்று சென்சஸ் எடுக்க வந்துள்ள அதிகாரி எனக் கூறியுள்ளனர். பெண்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால், அவர்கள் எதனையும் பதிவு செய்யாமல், வாய் மொழியாகவே கேட்டுள்ளனர்.

அவர்களிடம் எவ்வித நோட்டு புத்தகம் மற்றும் பைல்கள் போன்றவைகள் இல்லாத நிலையில், சந்தேகம் அடைந்த சில பெண்கள் ஐடி., கார்டு கேட்டுள்ளனர். மேலும், சிலர் தங்களது கணவர்களுக்கு செல்போன் மூலம் தெரிவிக்கவே, அங்கிருந்து அந்த வாலிபர்கள் ஓடியுள்ளனர்.

இதனால், பிங்கர்போஸ்ட் மற்றும் காந்தல் போன்ற பகுதிகளில் உள்ள பெண்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும். பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து காந்தல் செல்லும் ரெட் கிராஸ் சாலையில் உள்ள வீடுகளில் புகுந்த, சந்தேகத்திற்குரிய வாலிபர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி., கேமராக்களை ஆராய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>