×

எமரால்டில் புதிதாக அமைக்கப்பட்ட மயான சாலை தரமில்லாததால் மக்கள் அதிருப்தி

ஊட்டி, பிப். 12: ஊட்டி அருகேயுள்ள ஏமரால்டு பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்லும் சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதால், சில நாட்களிலேயே பழுதடைந்துள்ளது. ஊட்டி அருகே எமரால்டு பகுதியில் 11க்கும் மேற்பட்ட சிறு சிறு கிராமங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் எமரால்டு பகுதியில் உள்ள மயானத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த 10 கிராமங்களில் இறப்பு ஏதேனும் ஏற்பட்டால், இந்த மயானத்திற்கு வாகனங்கள் மூலமாகவோ அல்லது நடந்தோ கொண்டுசெல்வது வழக்கம். எமரால்டு பகுதியில் இருந்து மயானத்திற்கு செல்லும் சாலை மண் சாலையாக இருந்ததால், மழைக்காலங்களில் இந்த மயானத்திற்கு இறந்தவர்களின் உடல்களை கொண்டுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, இப்பகுதி மக்கள் தார் சாலையாக மாற்ற பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

எமரால்டு தொடக்கப்பள்ளி முதல் மயானம் வரை ரூ.28 லட்சத்தில் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு  மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை நிதியின் கீழ் இத்தலார் ஊராட்சி சார்பில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை முறையாக அமைக்கப்படாத நிலையில், சாலை அமைத்து ஒரு சில தினங்களே ஆன போதிலும், அங்காங்கே சாலை பழுதடைந்துள்ளது. மேலும், கையில் தோண்டினாலே சாலை உடைந்து வருகிறது. தரமில்லாமல் இச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், ஏதேனும் ஒரு மழை பெய்தால், இச்சாலை முழுமையாக தண்ணீரில் அடித்துச் செல்லம் அபாயம் நீடிக்கிறது. எனவே, இச்சாலையை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Emerald ,graveyard road ,
× RELATED மூலிகை வேளாண் தொழில் நுட்பங்களை...