காதலர் தின கொண்டாட்டம் புதிய வகை வாழ்த்து அட்டை கிப்ட் பொருட்கள் விற்பனை

கோவை, பிப். 12:  கோவையில் காதல் தினத்தையொட்டி புதிய வகை வாழ்த்து அட்டைகள், கிப்ட் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் காதலர்கள் தங்களுக்குள் பரிசுகளை கொடுத்தும், வாழ்த்துகளை தெரிவித்தும் அன்பை பகிர்ந்து கொள்கின்றனர். மேற்கத்திய கலாசார பரவலின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தமிழக இளைஞர்களிடமும் காதலர் தின கொண்டாட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்த காதலர் தினத்தில் வாழ்த்து அட்டைகளும், ரோஜா பூக்களுக்கும் அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. காதலர் தினத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பரிசு பொருட்கள் விற்பனை மையங்கள், வாழ்த்து அட்டைகள் விற்பனை மையங்கள், மலர் விற்பனை மையங்களில் விற்பனை களைகட்டியுள்ளது.

கோவையில் மலர் கொத்துகளுடன் கூடிய பொக்கே விற்பனை மையங்களில் விதவிதமான செயற்கை மலர்களால் கண்ணை கவரும் வகையில் பொக்கேக்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. ஆர்டர் பெயரிலும் பொக்கே தயாரித்து வருகின்றனர். மேலும், காதலர் தினத்திற்கான பரிசு பொருட்கள் விற்பனையும் கோவையில் தீவிரமடைந்துள்ளது. ரூ.10 முதல் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பலவிதமான பரிசு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. காதல் ரசம் சொட்டும் வகையில் வாசகங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகள் ரூ.100 முதல் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வாழ்த்து அட்டைகள், பரிசுப்பொருட்கள் விற்பனையாளர்கள் கூறுகையில், “தீபாவளி, பொங்கல் நாட்களில் வாழ்த்து அட்டைகளை தற்போது யாரும் வாங்குவது இல்லை. ஆனால், காதலர் தினத்திற்கான வாழ்த்து அட்டைக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. காதலர்கள் அதிக விலையுள்ள மற்றும் புகைப்படம் வைக்கும்படியான காதல் வாழ்த்து அட்டைகளை விரும்பி வாங்குகின்றனர். மேலும், புகைப்படங்களுடன் கூடிய டீ-கப், டெட்டி பியர், ஐ-லவ்-யூ வாசகம் இடம் பெற்ற சிவப்பு நிற இதய வடிவிலான தலையணைகள், கீ-செயின்கள், சிறிய அளவிலான பொம்மைகள் அதிகளவில் விற்பனையாகிறது. மேலும், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டுகளை போல் உள்ளது” என்றனர்.

Related Stories:

>