×

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் எம்.சி.ஐ அதிகாரிகள் ஆய்வு

கோவை, பிப்.12: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். கோவை வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ.-யில் மருத்துவக்கல்லூரியில் மருத்துவ படிப்பு துவங்கி நான்கு ஆண்டுகள் முடிகிறது. இந்த மருத்துவ கல்லூரியில் ஆண்டிற்கு நூறு எம்.பி.பி.எஸ். இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில், மாநில அரசிற்கு 85 இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 15 இடங்களும் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், தற்போது 4ம் ஆண்டு படித்து வரும் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இறுதியாண்டு செல்லவுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களுக்கு தேவையான வசதிகள் கல்லூரியில் உள்ளதா? என்பது தொடர்பாக எம்.சி.ஐ. அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இதில், மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கை, சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரங்கள் உள்ளிட்டவை தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு பின் இறுதியாண்டு படிக்கவுள்ள மாணவர்களுக்கான அனுமதி வழங்கப்படும்.  

இது குறித்து இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் முருகேசன் கூறுகையில், “எம்.சி.ஐ. அதிகாரிகள் மூன்று பேர் கொண்ட குழுவினர் கல்லூரியில் மாணவர்களுக்கான வசதிகள் குறித்து 2 நாள் ஆய்வு நடத்துகின்றனர். ஆய்வுக்கு பின் 5ம் ஆண்டு படிக்கவுள்ள மாணவர்களுக்கு அனுமதி வழங்குவார்கள்” என்றார்.

Tags : MCI ,ESI ,hospital ,
× RELATED வாரிசு சான்றிதழ் பெற மே 12க்குள் விண்ணப்பிக்கலாம்: இஎஸ்ஐ தகவல்