×

அரசு தோட்டக்கலை பண்ணைகளின் மூலமாக 12,500 மரக்கன்றுகள் சுபநிகழ்ச்சிகளுக்கு விநியோகம்

ஈரோடு, பிப். 12:   ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறியுள்ளதாவது: மரங்கள் சுற்றுச்சூழலை பசுமையாக்குவதுடன் தூய்மைப்படுத்துகிறது.
மேலும் இவை மனிதர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான பழங்கள், எரிபொருள், மருத்துவ மூலப் பொருட்கள் முதலியவற்றை வழங்குவதுடன் பறவைகளுக்கு வசிப்பிடமாகவும் திகழ்கிறது. சமீப காலமாக விழாக்கள், பண்டிகை, திருமண நிகழ்ச்சிகளில் அந்த தினத்தின் சிறப்பை நினைவு கூறும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு வரும்  விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது பிரபலமடைந்து வருகிறது. தமிழகத்தில் விழாக்கள், பண்டிகைகள், திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் அதிக அளவில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விழாக்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், காய்கறி நாற்றுகள் மற்றும் பழச்செடிகள் தரும் பண்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக நடப்பாண்டில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலை சார்ந்த நடவுசெடிகள், பழச்செடிகளை தரமானதாகவும், குறைந்த விலையிலும் வழங்கி வருகிறது.

 தமிழகத்தில் தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் 63 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்படுகிறது. இப்பண்ணைகளில் நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல் மற்றும் விளாம்பழம் போன்ற நமது பாரம்பரிய பழக்கன்றுகளும், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மரவேம்பு, புங்கம், தேக்கு, சவுக்கு போன்ற மரங்களும், மல்லிகை, வெட்சி, அரளி போன்ற பூச்செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன.

இதுபோன்ற நடவுச்செடிகள் தவிர பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவுச்செடிகள் விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்து வழங்கப்படும். அரசு தோட்டக்கலை பண்ணைகளில் அழகுச்செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகள் ரூ.10 முதல் ரூ.20 வரையும், மரச்செடிகள் ரூ.8 முதல் ரூ.60 வரையிலும், மலர்ச்செடிகள் ரூ.8 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பகுத்தம்பாளையம் அரசு தோட்டக்கலை பண்ணைகளின் மூலம் இதுவரை இந்த ஆண்டு மட்டும் 12 ஆயிரத்து 500 மரக்கன்றுகள், பழக்கன்றுகள் சுபநிகழ்ச்சிகளுக்கு குறைந்த விலையில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

எனவே வாடிக்கையாளர்கள் தங்களது வட்டார அளவில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட அளவிலான தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகத்தையோ இத்திட்டத்தின்கீழ் பயனடைய முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இ-தோட்டம் செயலி மூலமாகவும் நேரடியாக பண்ணைகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை http://tnhorticulture.tn.gov.in/horti/ என்ற இணையதளம் மூலமாகவும், 1800 425 4444 என்ற இலவச தொலைபேசியில் தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Government Horticulture Farms ,
× RELATED அரசு தோட்டக்கலை பண்ணைகளின் மூலமாக 12,500...